உள்ளூர் செய்திகள் (District)

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லாறு தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றம்

Published On 2023-06-21 09:12 GMT   |   Update On 2023-06-21 09:12 GMT
  • ஆங்கிலேயர்களால் கடந்த 1925 -ம் ஆண்டு தூண்களே இல்லாமல் தூரிப்பாலம் சாலை வசதிக்காக கட்டப்பட்டது.
  • சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி இன்று தொடங்கி வைத்தார்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வனப்பகுதி வழியாக சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு பகுதியில் ஆறு சென்றது. இதனையடுத்து ஆங்கிலேயர்களால் கடந்த 1925 -ம் ஆண்டு தூண்களே இல்லாமல் தூரிப்பாலம் சாலை வசதிக்காக கட்டப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையம் கல்லாறு முதல் நீலகிரி மாவட்டம் கூடலூர் வரை தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் வந்தது. இதனையடுத்து கல்லாறு பகுதியில் தூரிப்பாலம் பகுதியில் கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் கூடுதலாக ஒரு பாலம் கட்டப்பட்டது.

அதன்பின் அப்பகுதியில் இருந்த தொங்கு பாலமான தூரிப்பாலம் பயன்பாடில்லாமல் இருந்தது.

100 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் உள்ள இப்பாலம் தற்போதும் உறுதி தன்மையுடன் உள்ளது. மேலும் இச்சாலையின் வழியாக வரும் சுற்றுலா பயணிகள் இப்பாலம் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது. இதனையடுத்து ஓடந்துறை ஊராட்சி மன்றத்தலைவர் தங்கவேலு தூரிப்பாலத்தை தனியார் நிறுவன பங்களிப்புடன் புனரமைத்து இதனை நினைவு சின்னமாக மாற்றும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்லாறு தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு அதனை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்லாறு தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

Similar News