1000 மாணவ-மாணவிகள் பங்கேற்கும் 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சி
- பாராம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சி சேலம், மாசிநாயக்கன்பட்டி, நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
- சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சேலம்:
தமிழகத்தின் பாராம்பரியம் மற்றும் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு "மாபெரும் தமிழ்க் கனவு" நிகழ்ச்சி சேலம், மாசிநாயக்கன்பட்டி, நோட்டரி டேம் மேல்நிலைப்பள்ளியில் நாளை(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒருமுக்கியமான பகுதியாகும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு சொற்பொழிவுகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், சொற்பொழிவுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழர் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் அச்சடித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேடுக்கொண்டுள்ளார்.