சூறாவளி காற்றுடன் மழை- 10 ஆயிரம் வாழை மரங்கள் வேரோடு சரிந்தது
- கதலி, நேந்திரம் போன்ற வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
- தாளவாடி பகுதியில் மழை கொட்டி தீர்த்தது.
பவானிசாகர்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆலாம்பாளையம், பனையம்பள்ளி போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கதலி, நேந்திரம் போன்ற வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
அறுவடைக்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ரூ.35 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளதால் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேப்போல் தாளவாடி பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. ஈரோடு மாநகர் பகுதியில் பெரிய அளவில் மழை பெய்யாவிட்டாலும் லேசாக சாரல் மழை பெய்தது.