தூத்துக்குடி சித்தர் பீடத்தில் 10,008 கிலோ பச்சை மிளகாய் யாக வழிபாடு
- “ஆடி அமாவாசை”யை முன்னிட்டு 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது.
- பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி யாக குண்டத்தில் குவியல் குவியலாக பச்சைமிளகாயை போட்டு வழிபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் ஒரே கல்லால் உருவான ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது.
ஸ்ரீசித்தர் பீடத்தில் "ஆடி அமாவாசை"யை முன்னிட்டு பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன் தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் முற்றிலுமாக நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும்,
உலகை கடந்த காலங்களில் உலுக்கிய கொரோனா போன்ற கொடியநோய்கள் இல்லாமல் முற்றிலுமாக ஒழிந்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெறவும் வேண்டி சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் 10,008 கிலோ பச்சை மிளகாய் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது.
கணபதி, நவக்கிரக ஹோமம், பிரத்தியங்கிரா, காலபைரவர் ஹோமத்துடன் கோலாகலமாக தொடங்கி மதியம் வரை நடந்தது.
இதில், பங்கேற்ற பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவேண்டி யாக குண்டத்தில் குவியல் குவியலாக பச்சைமிளகாயை போட்டு வழிபட்டனர்.
யாக வழிபாடுகளைத் தொடர்ந்து ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், மஹா காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.