உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் 108 லட்சார்ச்சனை

Published On 2023-07-22 09:23 GMT   |   Update On 2023-07-22 09:23 GMT
  • ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
  • பக்தர்கள் அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் அமாவாசை நாட்கள், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த கோவிலுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தன்று ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த வருடத்திற்கான 30-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது.

குண்டம் திருவிழாவினை முன்னிட்டு நேற்று கோவில் வளாகத்தில் தமிழ்முறைப்படி லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது. இதனை கோவில் அறங்காவலர் வசந்தா சம்பத், தாரணி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வனபத்ரகாளியம்மனுக்கு பல வண்ண மலர்களால் தமிழ் முறையில் ஓதுவார்கள் ஒரு லட்சம் முறை அம்மன் திருநாமத்தை வணங்கினர்.

அன்னைத்தமிழ் லட்சார்ச்சனையை முலத்துறை சக்திவேல், குழந்தைவேல் ஆகியோர் நடத்தி வைத்தனர். உபயதாரர்கள் பாக்கியலட்சுமி குடும்பத்தார்கள், கர்த்திக், கனகாச்சலம், நந்தினி, ஜெகதா, பிரபு, பூர்ணிமா உள்ளிட்டோர் லட்சார்ச்சனைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News