உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.11,274 கோடி மதிப்பில் கடன் திட்ட அறிக்கை

Published On 2022-12-23 10:34 GMT   |   Update On 2022-12-23 10:34 GMT
  • நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.

நாமக்கல்:

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டு பேசியதாவது,

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி, நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.

விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை திட்டம் விளக்குகிறது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டு பயிர் கடன் ரூ.4961.95 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ.1238.07 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ.115.34 கோடி, இதர விவசாய கடன்கள் ரூ.136.90 கோடி, விவசாயத்துக்கான கடன் மொத்த மதிப்பீடு ரூ.6452.27 கோடியாகவும், சிறுகுறு நடுத்தர தொழில் கடன் ரூ.3657.75 கோடி, ஏற்றுமதி கல்வி மற்றும் கடன் வசதிக்கான கடன் மதிப்பீடு ரூ.294.79 கோடி ஆகும்.

அடிப்படை கட்டுமான வசதிக்கான கடன் ரூ.66 கோடி ஆகும். மகளிர் சுய உதவி குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் ரூ.757.80 கோடி என அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்து அதற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப் படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும்.

வேளாண்மையில் எந்திரமயமாக்கல் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். வங்கிகள் இது போன்ற முதலீடுகளுக்கு துணையாக இருக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் அளவில் முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி செயலாளர் ரமேஷ், முன்னாடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News