தாமிரபரணி ஆற்றின் குறுக்கே முக்காணியில் கட்டப்படும் தடுப்பணையால் 1,205 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் - நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் தகவல்
- தடுப்பணை கட்டுமான பணிகளை நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- முக்காணி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 1,205 ஹெக்டர் ஆயக்கட்டு பாசனபரப்பு பயன்பெறுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் முக்காணி, சேர்ந்தமங்கலம் மற்றும் புன்னக்காயல் ஆகிய கிராமங்களின் அருகில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கழிமுகப் பகுதியில் ரூ.46.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தடுப்பணை கட்டுமான பணிகளை நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், புதிதாக கட்டப்பட்டுவரும் தடுப்பணையால் அருகில் உள்ள சேர்ந்தமங்கலம், கைலாசப்புரம், ஆத்தூர், புன்னக்காயல், ராமசந்திரபுரம் மற்றும் முக்காணி ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள 1,205 ஹெக்டர் ஆயக்கட்டு பாசனபரப்பு பயன்பெறுகிறது.
மேலும், தடுப்பணையில் 138 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதுமட்டும்மல்லாமல், கடல் நீர் உட்புகுதல் தடுக்கப்படுவதால் நிலத்தடி நீரின் தன்மை பாதுகாக்கப்படுகிறது என்று கூறினார். ஆய்வின் போது செயற்பொறியாளர் (தாமிரபரணி வடிநில கோட்டம், நெல்லை) மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து,உதவிபொறியாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.