களியக்காவிளை அருகே இன்று அதிகாலை கேரளாவுக்கு கடத்த முயன்ற 13 டன் ரேசன் அரிசி பறிமுதல்
- 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று களியக்காவிளை சந்திப்பு பகுதியில் லாரியை மடக்கி பிடித்தனர்.
- 13 டன் ரேசன் அரிசியையும், லாரியையும் போலீசார் பறி முதல் செய்தனர்.
கன்னியாகுமரி:
தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணெய் கடத்துவது தொடர் நடவடிக்கையாக உள்ளது.
இதனை தடுக்க தமிழக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக-கேரள எல்லை பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையும் நடத்தி வருகின்றனர். இதில் அவ்வப்போது கடத்தல் அரிசி வாகனங்களுடன் பிடிபட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை களியக்காவிளை அருகே தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக் குமரன் தலைமையில் போலீ சார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இட மாக கேரள பதிவெண் கொண்ட லாரி வந்தது.
அந்த லாரியை நிறுத்து மாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் லாரியை நிறுத்தாமல் டிரைவர் வேக மாக ஓட்டிச் சென்றார். இதனை தொடர்ந்து போலீசார் தங்கள் வாகன த்தில் லாரியை விரட்டிச் சென்றனர். சினிமா காட்சி போல லாரியை பின்தொடர்ந்த போலீசார் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று களியக்காவிளை சந்திப்பு பகுதியில் லாரியை மடக்கி பிடித்தனர்.
பின்னர் லாரியை சோதனை செய்த போது அதில் மூடை மூடையாக ரேசன் அரிசி இருந்தது. அதனை கேரளாவுக்கு கடத்துவது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவரது பெயர் முத்து சிவன்(வயது46) என்பதும் அழகிய பாண்டியபுரம் பகுதி யை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.தொடர்ந்து லாரியில் இருந்த சுமார் 13 டன் ரேசன் அரிசியையும், லாரியையும் போலீசார் பறி முதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கபட்டது.அவர்கள் அரிசி யை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், லாரியை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.