உழவர் சந்தைகளில் ஒரே நாளில் 1800 கிலோ தக்காளி விற்பனை
- கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- 6 உழவர் சந்தைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி விலை உச்சத்தை எட்டி உள்ளது. அங்கு ஒரு கிலோ ரூ.120 முதல் 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, மேட்டுப்பாளையம், சுந்தராபுரம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து, பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது என்று தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகியவை முடிவு செய்தன.
அதன்படி கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளிடம் சுமார் 1800 கிலோ தக்காளிப் பழங்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன. அதன்பிறகு இவை உழவர் சந்தைக்கு கொண்டுவரப் பட்டது. அங்கு உள்ள கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவை மாவட்ட வெளிமார்க்கெட் சந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், அங்கு உள்ள 6 உழவர் சந்தைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தக்காளிப்பழங்களை குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர். இதனால் ஒரே நாளில் 1800 கிலோ தக்காளிப்பழங்கள் விற்று தீர்ந்து உள்ளன.
கோவை மாவட்ட உழவர் சந்தைகளில் இன்றும் தக்காளி விற்பனையில் ஈடுபடுவது என்று தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.