திருவள்ளூரில் உணவில் நிறம் கலந்த 19 கடைகளுக்கு அபராதம்
- கடைக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- 182 கிலோ பிளாஸ்டிக் பைகள் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவுரையின்படி, திருவள்ளூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கரன் மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருவள்ளூர் பஸ் நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், ஓட்டல், டீக்கடை, பூக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த 5 கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மேலும் 3 இனிப்பகத்தில் இனிப்புகளுக்கு அதிகப்படியாக வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த 3 கடைகளில் இருந்த வண்ணம் சேர்க்கப்பட்டிருந்த 10 கிலோ இனிப்பு மற்றும் கார வகைகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் 3 பிரியாணி கடையில் சிக்கனில் அதிகப்படியான வண்ணம் சேர்க்கப்பட்டிருந்த 6 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து கடைக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
11 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை இருந்ததால் தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. 182 கிலோ பிளாஸ்டிக் பைகள் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
2 கடைகளில் உணவுப் பொருட்களில் காலாவதியான 100 பாக்கெட் சிப்ஸ், பிஸ்கட், முறுக்கு உள்ளிட்ட பொருட்கள் 5 லிட்டர் எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.