கடலூர் மாவட்டத்தில் 191 தற்காலிக தங்கும் இடங்கள் தயார்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்
- மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- அவசரகால முன்னறிவிப்பான் கருவிகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் எச்சரிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பொது மக்களை தங்கவைப்பதற்கான தற்காலிக தங்குமிடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம், வள்ளிக்கந்தன் நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சொத்திக்குப்பம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம் மற்றும் ராசாப்பேட்டை புயல் பாதுகாப்பு மையம் ஆகிய மையங்களில் குடிநீர், ஜெனரேட்டர் வசதி, கழிவறை உள்ளிட்ட பொதுமக்களை தங்கவைப்பதற்கான அடிப்படை வசதிகள் குறித்தும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:-
கடலூர் மாவட்டத்தில் மிக அதிக பாதிக்கக் கூடிய பகுதிகள், அதிகமாக பாதிக்கக்கூடிய பகுதிகள், மிதமாக பாதிக்கக்கூடிய பகுதிகள், குறைவாக பாதிக்கக்கூடிய பகுதிகள் எனக் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் பேரிடரை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 28 புயல் பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக தங்கும் இடங்கள் தயார்நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை செய்வதற்கு அவசரகால முன்னறிவிப்பான் கருவிகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். இவ்ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.