உள்ளூர் செய்திகள்

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷ் மற்றும் பெருமாள்.

விவசாயி வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது

Published On 2022-12-09 09:31 GMT   |   Update On 2022-12-09 09:31 GMT
  • கடந்த மாதம் 15-ந் தேதி கண்ணன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். தனது வேலைகளை முடித்துக் கொண்டு மதியம் 2 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
  • உள்ளே சென்று பார்த்த போது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கக் காசு, மோதிரம் உள்பட 2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம் குடித் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). விவசாயி.

நகை திருட்டு

கடந்த மாதம் 15-ந் தேதி கண்ணன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். தனது வேலைகளை முடித்துக் கொண்டு மதியம் 2 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கக் காசு, மோதிரம் உள்பட 2 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். இது பற்றி கண்ணன் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் சிக்கினர்

இந்நிலையில் நேற்று ராசிபுரம் போலீசார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் தேங்கல்பாளையத்தில் கண்ணன் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே மோட்டுபட்டியைச் சேர்ந்த ரமேஷ் (30), தாரமங்கலம் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த சேட்டு என்கிற பெருமாள்(40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

நகை பறிமுதல்

அவர்களிடம் இருந்து ராசிபுரம் மற்றும் சில இடங்களில் திருடிய 5 1/2 பவுன் நகைகளையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ரமேஷ் மற்றும் பெருமாள் ஆகியோரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது தாரமங்கலம், எடப்பாடி, பனைமரத்துப்பட்டி, கெங்கவல்லி போன்ற போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News