குன்னூரில் விதிமீறி செயல்பட்ட 2 தங்கும் விடுதிக்கு 'சீல்'
- வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
- இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
ஊட்டி,
சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதாலும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. அவ்வாறு வருகை தரும் அவர்கள் ஊட்டி, குன்னூரில் உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்து அறை எடுத்து தங்குகின்றனர்.
பின்னர் பூங்காக்கள், காட்சி முனைகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். கூட்டம் அலைமோதுவதால் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அறை கிடைக்காதவர்கள் காட்டேஜ்களில் தங்கி வருகிறார்கள்.
இந்தநிலையில் குன்னூர் நகராட்சியில் வீடு கட்டுவதற்கு என அனுமதி பெற்று விட்டு விதிமீறி தங்கும் விடுதியாக மாற்றி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி, குன்னூர் தாசில்தார் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் தீபக் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் குன்னூர் நகரம், கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் அனுமதியின்றி 2 தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து நேற்று தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் வருவாய்த்துறையினர் 2 விடுதிகளை பூட்டி சீல் வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வீட்டிற்கு என அனுமதி பெற்று விட்டு அனுமதியின்றி தங்கும் விடுதிகளாக மாற்றக்கூடாது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருமானம் குறைகிறது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.