கோவையில் வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி
- பரத்தின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடு இழந்து விபத்துக்குள்ளானது.
- வெங்கடேசலு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானார்.
கோவை,
திண்டுக்கல் அருகே உள்ள வேடச்சந்தூரை சேர்ந்தவர் செந்தில்குமார். பைனான்சியர். இவரது மகன் பரத் (வயது 21). இவர் கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று பரத்துடைய நண்பரான குமரேசன் என்பவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் இல்லை. எனவே பெட்ரோல் போட செல்வதற்காக பரத் தனது மோட்டார் சைக்கிள் மூலம் குமரேசன் மோட்டார் சைக்கிளை காலால் மிதித்து தள்ளியபடி சென்று இருந்தார்.மோட்டார் சைக்கிள் ஒத்தகால்மண்டபம் - ஒக்கிலிபாளையம் ரோட்டில் சென்ற போது பரத்தின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த கம்பி வேலி, கல்லில் மோதி நின்றது. இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பரத்தை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பரத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீளமேடு அருகே உள்ள நேருநகரை சேர்ந்தவர் வெங்கடேசலு (75). சம்பவத்தன்று இவர் கோவை- காளப்பட்டி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவ ரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.