உள்ளூர் செய்திகள்

இந்திய கப்பற்படையில் 20 சதவீதம் பெண்கள் சேர்ப்பு

Published On 2022-07-06 09:07 GMT   |   Update On 2022-07-06 09:07 GMT
  • மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தில் இந்திய கப்பற்படையில் 20 சதவீதம் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள்
  • சேலம், நாமக்கல் மாணவிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

சேலம்:

இந்திய நாட்டின் முப்படைகளான ராணுவப்படை, கப்பற்படை, விமானப் படை ஆகிய பாதுகாப்பு படைகளில் இளைஞர்கள், இளம்பெண்களை அதிக அளவில் நியமிக்க முடிவு செய்து மத்திய பா.ஜ.க. அரசு அக்னி பத் திட்டத்தை கடந்த 14-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய பணி நியமன முறையை 'டூர் ஆப் தி டூட்டி' என்று அழைக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். மாதந்தோறும் ரூ.35 ஆயிரத்துக்கு மேல் ஊதியம், பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

4 ஆண்டுகள் முடிவில் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் பட்டப்படிப்பு படித்து முடித்தற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

20 சதவீதம் பெண்கள்

இந்த திட்டத்தில் சேர வேண்டி தமிழகத்தில் அதிக அளவில் இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்திய கப்பற்படையில் பெண் மாலுமிகளும் சேர்க்கப்பட உள்ளனர். இதில் நடப்பாண்டில் 20 சதவீதம் பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இத்திட்டத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பணி மற்றும் இளநிலை பட்டம் வழங்கப்படுவதால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்-2, பட்டப்படிப்பு பயிலும் மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கின்றனர்.

17½ வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கடற்படையில் சேரும் முதல் பிரிவினருக்கு ஐ.என்.எஸ்.சில்கா போர்கப்பலில் ஓடிசாவில் வருகிற நவம்பர் மாதம் 21-ந்தேதி பயிற்சிகள் தொடங்குகின்றன.

Tags:    

Similar News