செய்திகள் (Tamil News)

வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம்: ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி மீண்டும் உத்தரவாதம்

Published On 2016-06-15 08:17 GMT   |   Update On 2016-06-15 08:17 GMT
புதிய விதிகளின் அடிப்படையில் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி மீண்டும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
சென்னை:

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்று வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், இந்த புதிய திருத்தங்களின் அடிப்படையில் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று தலைமை நீதிபதி பல முறை உத்தரவாதமும் அளித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில், தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.

அப்போது, வக்கீல் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆஜராகி, ‘கோவை மாவட்ட கோர்ட்டில் ஆஜராக நேற்று சென்று இருந்தேன். வழக்கறிஞர் சட்டத்தில் ஐகோர்ட்டு கொண்டு வந்துள்ள திருத்தங்களை கண்டித்து அங்கு வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், என் கட்சிக்காரருக்காக கோர்ட்டில் என்னால் ஆஜராக முடியவில்லை. எனவே, இந்த பிரச்சினையில் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த ஐகோர்ட்டு சுமூக முடிவினை மேற்கொள்ளவேண்டும்’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘புதிய விதிகளின்படி வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் புதிய விதியை அமல்படுத்த மாட்டோம் என்றும் ஏற்கனவே உத்தரவாதம் அளித்துள்ளேன்.

இந்த புதிய விதிகளில் உள்ள ஆட்சேபனை விதிகளை நீக்குவது குறித்து வக்கீல்கள் சங்கங்கள் கோரிக்கை மனு கொடுத்தால், அதையும் பரிசீலிக்க தயாராக உள்ளோம்’ என்று கருத்து தெரிவித்தனர்.

Similar News