செய்திகள் (Tamil News)

திருப்பூரில் ரூ.570 கோடி பறிமுதல்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு தி.மு.க. தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Published On 2016-06-29 02:15 GMT   |   Update On 2016-06-29 02:15 GMT
திருப்பூரில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு தி.மு.க. தொடர்ந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடக்கிறது.
சென்னை:

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோது, திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், இந்த பணம் ஐதராபாத்தில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று அந்த பணத்தை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி தி.மு.க.வின் பத்திரிகை தொடர்புத்துறை செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஸ்டேட் வங்கியின் இரு கிளைகளுக்கு இடையே நடந்த பரிவர்த்தனை ஆகும். இந்த பண பரிவர்த்தனையில் சர்வதேச தொடர்பு எதுவும் இல்லை. சி.பி.ஐ. விசாரிக்கும் அளவிற்கு இந்த வழக்கு ஒன்றும் பெரிய குற்றம் தொடர்பானதோ அல்லது மத்திய அரசு ஊழியர்கள் மீதானதோ இல்லை. சி.பி.ஐ.யில் தற்போது குறைவான எண்ணிக்கையில்தான் அதிகாரிகளும் உள்ளனர். எனவே, இந்த வழக்கில் தகுந்த உத்தரவை இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News