செய்திகள் (Tamil News)

பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை: பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்கள் வினியோகம்

Published On 2016-09-17 03:47 GMT   |   Update On 2016-09-17 03:47 GMT
பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
சென்னை:

அனைத்து பள்ளிகளிலும் இப்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் 23-ந் தேதி முடிவடைகிறது. எனவே பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் 9 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை முடிந்து அக்டோபர் மாதம் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்றே 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவத்திற்குரிய விலை இல்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்த நோட்டு, புத்தகங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள பாடநூல் நிறுவனத்தில் இருந்து மாவட்ட கல்வி அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவை விடுமுறை நாட்களிலேயே சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

Similar News