செய்திகள் (Tamil News)

ரூ.500, 1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்ய கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

Published On 2016-11-24 10:43 GMT   |   Update On 2016-11-24 10:43 GMT
ரூ.500, 1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி, மனுவை அனைத்து விவரங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யுங்கள் என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தனர்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், சுசித்ரா விஜயன் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் பணப் புழக்கம் குறைந்தது. மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

இந்திய வரலாற்றில் இதுபோல ஒரே இரவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று இதுநாள் வரை அறிவித்தது இல்லை. இவ்வளவு பெரிய முடிவினை கொள்கை ரீதியாக மத்திய அரசு எடுக்கும் போது, அதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். தற்போது, ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பினால் அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் மத்தியில் பணப் புழக்கம் ஏற்படும் வரை, ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும். இந்த ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று மத்திய நிதி அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் எந்த அடிப்படையில் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்கின்றீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மனுதாரர் வக்கீல், ‘மனுவில் அதை நான் கூறவில்லை. ஆனால், என்னுடைய வாதத்தில் அதை குறிப்பிடுகிறேன்’ என்றார். மனுவில் காரணம் கூறாமல், எப்படி மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவைகளுக்கு நோட்டீசு அனுப்ப முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

இந்த மனுவை அனைத்து விவரங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யுங்கள் என்று கூறி விசாரணையை டிசம்பர் 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Similar News