செய்திகள் (Tamil News)

சேலம் வியாபாரியிடம் ரூ.70 லட்சம் பறித்த 2 பேர் கைது

Published On 2017-01-15 11:55 GMT   |   Update On 2017-01-15 11:55 GMT
சேலம் வியாபாரியிடம் ரூ.70 லட்சம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி:

சேலம், அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவாநந்து (வயது 37). இவர் மொத்தமாக செல்போன் வாங்கி, அதனை விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சிவாநந்து தன்னிடம் உள்ள மொத்தம் ரூ. 70 லட்சம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கமி‌ஷன் அடிப்படையில் மாற்ற முடிவு செய்தார்.

இது தொடர்பாக தனக்கு தெரிந்த குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன், இவரது மனைவி ஜனனி, நண்பர்கள் வினித், ரமேஷ், விமல் உள்ளிட்டோரிடம் பேசி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து 17 சதவீதம் கமி‌ஷன் அடிப்படையில் பணம் மாற்றுவதற்கான பேரம் பேசி முடிக்கப்பட்டது. பின்னர் எங்கு வரவேண்டும், எப்போது பணத்தை கைமாற்ற வேண்டும் என்பது குறித்து பேசி, இடமும் தேர்வு செய்யப்பட்டது.

அதன்படி தர்மபுரி பை-பாஸ் எம்.ஜி.ஆர். ஓட்டல் அருகே வருமாறு சிவநாந்துவிடம் கூறப்பட்டது.

அதன்படி கடந்த மாதம் 10-ந்தேதி அன்று 17 சதவீதம் கமி‌ஷன் அடிப்படையில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் மொத்தம் ரூ.70 லட்சத்தை மாற்றுவதற்காக சிவாநந்து எடுத்துக் கொண்டு தர்மபுரி பை-பாஸ் எம்.ஜி.ஆர். ஓட்டல் அருகே வந்தார்.

அப்போது அங்கு காத்திருந்த சந்திரசேகரன், இவரது மனைவி ஜனனி, நண்பர்கள் வினித், ரமேஷ், விமல் உள்ளிட்டோர் சிவாநந்துவிடம் இருந்த பழைய70 லட்சம் ரூபாயை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவாநந்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் (வயது 40), விமல் (37) ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

Similar News