செய்திகள் (Tamil News)

பீட்டா அமைப்பை தடை செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-02-01 08:03 GMT   |   Update On 2017-02-01 08:03 GMT
பீட்டா அமைப்பை தடை செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்வதாக ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

பீட்டா என்ற அமைப்பு விலங்குகள் நல அமைப்பாக செயல்படுகிறது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே, விலங்குகள் சாப்பிடுவதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும், அதை ஆடையாக அணிவதற்கும் இல்லை என்பது தான். இந்த அமைப்பில், 300 ஊழியர்கள் உள்ளனர் என்றும் உலகம் முழுவதும் 5 லட்சம் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆனால், இந்த அமைப்புக்கும் இந்தியாவில், மும்பையில் கிளை உள்ளது. இதற்கு வெளிநாட்டில் இருந்து வரும் நிதி முறைகேடாக வருகிறது.

மேலும், இந்த பீட்டா அமைப்பின் இணையதளத்தில், போராட்டம் என்ற பெயரில் ஆபாச படங்களை வெளியிடுகிறது. இது பெண்களை அவதூறாக சித்தரிக்கும் விதமாக உள்ளது.

மேலும், வெளிநாட்டு அமைப்பு இந்தியாவில் பதிவு செய்து செயல்பட்டால், அதில் இந்தியவர்கள் யாராவது முக்கிய பொறுப்பில் இருக்க வேண்டும். அவ்வாறு பீட்டா அமைப்பில் இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் இல்லை. எனவே, சட்டவிரோதமாக செயல்படும் பீட்டா அமைப்பை தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘பீட்டா அமைப்பின் இணையதளத்தில் ஆபாச படம் வெளியானால், அதை பார்க்காதீர்கள். ஏன் அந்த இணையதளத்துக்குள் செல்கிறீர்கள்?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மனுதாரர் வக்கீல், ‘விலங்குகள் நலனை விரும்பும் குழந்தைகள் அந்த இணையதளத்துக்குள் செல்கின்றனர். அப்போது ஆபாசப்படங்கள் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த அமைப்பின் மீது குற்ற வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்றார்.

‘ஆபாச படம் வெளிநாடுகளில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான சட்டம் உள்ளது’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News