செய்திகள் (Tamil News)

பல்லாவரம் அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை

Published On 2017-04-06 10:06 GMT   |   Update On 2017-04-06 10:06 GMT
பல்லாவரம் அருகே குடிநீர் கேட்பது போல் நடித்து பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரகாசம். தனியார் விமான நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவரது மனைவி பானுமதி.

நேற்று மாலை பானுமதி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் குடிக்க தண்ணீர் தரும்படி கேட்டார்.

இதையடுத்து தண்ணீர் எடுப்பதற்கு வீட்டிற்குள் பானுமதி சென்றார். பின்னால் மறைந்து சென்ற வாலிபர் பானுமதியை கத்தியை காட்டி மிரட்டினான். பின்னர் அவரது வாய்க்குள் துணியை திணித்து, கையை கட்டி போட்டு அவர் அணிந்து இருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டான்.

சிறிது நேரத்துக்கு பின்னர் பூட்டி இருந்த கதவை பானுமதி தட்டினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பானுமதியை மீட்டனர். மொத்தம் 10 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து சங்கர்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் 2-வது மெயின் ரோட்டில் வசிப்பவர் சந்திரசேகர். இவர் காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு கிரீல்கேட்டை மட்டும் பூட்டிவிட்டு தூங்கினார். அப்போது கொள்ளையர்கள் பூட்டை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச் சென்றனர்.

பின்னர் கொள்ளையர்கள் அருகில் உள்ள குடிநீர் வாரிய அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஏதும் கிடைக்காததால் கம்ப்யூட்டரை கீழே போட்டு உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News