செய்திகள் (Tamil News)

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை

Published On 2017-04-17 11:24 GMT   |   Update On 2017-04-17 11:24 GMT
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக அமைச்சராக 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டுவரை பதவி வகித்தவர் சி.அரங்கநாயகம். இவர் அமைச்சராக பதவி வகித்த காலக்கட்டத்தில் தன் பெயரிலும், தன் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான் ஆகியோர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.15 கோடிக்கு சொத்துச் சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருந்தது. இந்த வழக்கில் 2006-ம் ஆண்டு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்பதால் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அரங்கநாயகம் உள்பட 4 பேர் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர்.

ஆனால், லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளதால், வழக்கில் இருந்து இவர்களை விடுவிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது. அத்துடன், வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை விரைந்து விசாரிக்கும்படி கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டது. எனவே, அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி எம்.கோமதிநாயகம் இன்று தீர்ப்பளித்தார்.

அரங்கநாயகத்தின் மனைவி மற்றும் மகன்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Similar News