செய்திகள் (Tamil News)

அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் பேனர், போஸ்டர் அகற்றப்படுமா?

Published On 2017-04-24 07:49 GMT   |   Update On 2017-04-24 07:50 GMT
அ.தி.மு.க.வில் பிளவுப்பட்ட 2 அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று மாலை தொடங்குவதற்கு முன்பு அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் பேனர், போஸ்டர் அகற்றப்படுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சென்னை:

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணியும் செயல்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க.வில் பிளவுப்பட்ட இந்த இரண்டு அணிகளையும் இணைப்பதற்காக பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

அ.தி.மு.க. கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் சசிகலா, தினகரன் குடும்பத்தினரின் தலையீடு இருக்க கூடாது என்றும் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். அணி நிபந்தனை விதித்தது. இதை எடப்பாடி பழனிசாமி அணி ஏற்றுக் கொண்டது. சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து கட்சியும், ஆட்சியும் முற்றிலும் விலகியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ராயப்பேட்டை யில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் சசிகலாவின் போஸ்டர், பேனர் இன்னும் அப்படியே இருக்கிறது. ஜெயலலிதாவுடன் சசிகலா இருப்பது போன்ற பேனர், போஸ்டர் கட்சி அலுவலகத்தில் உள்ளது. கட்சி அலுவலகத்தில் உள்ள சசிகலா, தினகரன் படங்களை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வரும் முன்பு அகற்றிவிட வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று மாலை பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் பேனர், போஸ்டர் அகற்றப்படுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மூத்த அமைச்சர் ஒருவர் கூறும்போது, “கட்சி அலுவலகத்தில் உள்ள படங்களை அகற்ற சொல்வது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை” என்றார்.

Similar News