செய்திகள் (Tamil News)

மதுரை அருகே மழைக்கு பலியான மூன்று பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2017-05-10 23:32 GMT   |   Update On 2017-05-10 23:32 GMT
மதுரை அருகே இடி, மின்னல், மழைக்கு பலியான மூன்று பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

மதுரை அருகே இடி, மின்னல், மழைக்கு பலியான மூன்று பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம் கள்ளிக்குடி உள்வட்டம், கள்ளிக்குடி உட்கடை அகத்தாபட்டி கிராமத்தில் 9-ந் தேதியன்று பெய்த இடி மின்னலுடன் கூடிய மழையின் காரணமாக, மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த பொன்பாண்டியின் மகன் சுரேஷ் உயிர் இழந்தார்.

சிவரக்கோட்டை உள்வட்டம், சுவாமிமல்லம்பட்டி கிராமத்தில் பெய்த இடி மின்னலுடன் கூடிய மழையில், இடி விழுந்ததில், மலைச்சாமியின் மகள் சூரம்மாள் பலியானார்.செங்கப்படை பிட்-1 கிராமம், புளியம்பட்டி சாலையில் கூலி வேலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் ரங்கசாமியின் மகன் சங்கர்ராஜ் உயிர் இழந்தார்.

இடி, மின்னல், மழையின் காரணமாக உயிர் இழந்த இந்த 3 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Similar News