செய்திகள் (Tamil News)

மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு: பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் மாணவர்கள் முற்றுகை - 50 பேர் கைது

Published On 2017-06-01 09:57 GMT   |   Update On 2017-06-01 09:57 GMT
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயபுரம்:

மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதித்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை ஐ.ஐ.டி.யில், மாட்டு இறைச்சி பிரச்சினையில் கேரளாவை சேர்ந்த மாணவர் சூரஜ் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்தும், ஐ.ஐ.டி. மாணவர் சூரஜ்ஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் பாரிமுனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில செயலாளர் மாரியப்பன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பூக்கடை பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் அவர்கள் என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

அவர்களை உதவி கமி‌ஷனர் ரவி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Similar News