செய்திகள் (Tamil News)

காதல் பிரச்சினையில் மோதல்: பயங்கர ஆயுதங்களுடன் திரண்ட 2 சமூகத்தினர்: போலீஸ் தடியடி

Published On 2017-07-26 10:55 GMT   |   Update On 2017-07-26 10:55 GMT
புதுவை அருகே காதல் பிரச்சினையில் இரு தரப்பினர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஏற்பட்டது. இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகூர்:

புதுவை மாநிலம் பாகூரில் 2 சமூகத்தினர் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வந்தது.

சமீபத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த ஆண்கள் 2 பேர் வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்களை காதலித்து அழைத்து சென்று விட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு பெண்ணை இதேபோல் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் காதலித்து அழைத்து சென்று விட்டார். இதனால் மோதல் போக்கு அதிகரித்தது.

இன்று காலை ஒரு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்காக பாகூர் வேப்பமரத்து ஸ்டாப்புக்கு பஸ் ஏற வந்தனர்.

அப்போது அங்கிருந்த வாலிபர்கள் சிலர் அவர்களிடம் சென்று இது சம்பந்தமாக கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்ததும் இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் திரண்டனர்.

இதற்கிடையே ஒரு சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது தாயாருடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் திரும்பி செல்லும் போது அவரையும், தாயாரையும் மற்றொரு சமூகத்தினர் தாக்கினார்கள். இதனால் பிரச்சினை வேறு விதமாக திசை திரும்பியது.

தாக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர். பதிலுக்கு எதிர் தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் ஆயுதங்களுடன் திரண்டார்கள்.

அவர்கள் எந்த நேரத்திலும் மோதிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கி வந்தனர்.

உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ரகீம், இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், பாபுஜி, அறிவு செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அவர்கள் ஆயுதங்களுடன் திரண்டு இருந்தவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தள்ளுமுள்ளிலும் ஈடுபட்டனர். ஏராளமான பெண்கள் திரண்டு வந்து போலீசாரிடம் கடும் வாக்கு வாதம் செய்தார்கள்.

நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது. இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து ஓடினார்கள்.

இதேபோல் நகரில் ஆங்காங்கே திரண்டு இருந்தவர்களையும் போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள்.

ஏற்கனவே தாக்கப்பட்ட வாலிபரும், அவரது தாயாரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். அப்போது ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டபடி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களையும் போலீசார் விரட்டியடித்தனர்.

இந்த நேரத்தில் சில இடங்களில் தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றது. ஒரு மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினார்கள். கடை ஒன்றின் ஏ.சி. அடித்து நொறுக்கப்பட்டது. ஒரு வீட்டின் கண்ணாடியையும் கும்பல் ஒன்று உடைத்தது.

இந்த மோதலால் பாகூரில் பதட்டம் நிலவுகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பாகூரில் பஸ்களும் ஓடவில்லை.

மேலும் அசம்பாவித சம்பவங்ககள் ஏதும் நடந்து விடாமல் தடுக்க இரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியிலும், முக்கிய இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News