செய்திகள்

மதுக்கூர் அருகே ரவுடி கொலையில் 7 பேர் அதிரடி கைது

Published On 2017-11-08 14:37 GMT   |   Update On 2017-11-08 14:37 GMT
மதுக்கூர் அருகே ரவுடி கொலையில் 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூரைச் சேர்ந்தவர் முகைதீன். இவர் சம்பவத்தன்று மதுக்கூர் அருகே சிவகொல்லையில் உள்ள தனது நண்பர் மெக்கானிக் கடையில் இருந்தார். அப்போது திடீரென ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் முகைதீனை சரமாரியாக வெட்டினர். இதனை தடுத்த நண்பரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த பட்டுக் கோட்டை போலீசார் அவர்களை மீட்டு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி முகைதீன் இறந்தார்.

இதையடுத்து இந்த வழக்கின் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் பட்டுக்கோட்டை பகுதியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்மூலம் போலீசார் விரைந்து சென்று உமர், சுரேஷ், அரவிந்த், காளிதாஸ், கார்த்திகேயன், சதாம் உஷேன், அஷார் ஆகிய 7 பேரை கைது செய்து பட்டுகோட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான 2 பேரை தேடி வருகின்றனர்.

Similar News