செய்திகள்

கொடைக்கானலில் விடிய விடிய கன மழை

Published On 2017-12-04 09:36 GMT   |   Update On 2017-12-04 09:36 GMT
கொடைக்கானலில் விடிய விடிய கன மழை காரணமாக அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய நீர்வீழ்ச்சிகளான வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பேரிபால்ஸ், வட்டக்கானல் அருவி, செண்பா அருவி, பியர்சோழா அருவி, எலிவால் அருவி, 5 வீடு அருவி உள்ளிட்ட இடங்களில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

மேலும் மலைப்பகுதியில் புதிய அருவிகள் உருவாகி காண்போர் கண்களை கவர்ந்து வருகிறது. தொடர்ந்து பெய்த மழையினால் மின் கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் பாதிக்கப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கடும் குளிர் நிலவுகிறது இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தமிழக பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். கேரளாவில் இருந்து மட்டுமே ஒரு சிலர் வந்து செல்வதால் முக்கிய சுற்றுலா தலங்களான கோக்கர்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா, தூண்பாறை, நட்சத்திர ஏரி, குணாகுகை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது.

பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்து வருகின்றனர். ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை தொடர்ந்து விடிய விடிய கன மழையாக நீடித்தது.

இந்த மழை காரணமாக மரங்கள் சாலையில் விழுந்தன. அவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர் ஒரு சில இடங்களில் சுற்றுச் சுவர் கற்கள் பெயர்ந்து சாலையில் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News