செய்திகள் (Tamil News)

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு - மழை பெய்ய வாய்ப்பு

Published On 2018-01-08 04:25 GMT   |   Update On 2018-01-08 04:25 GMT
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளதால் தமிழக கடலோரங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழக கடலோரங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று வறண்ட வானிலை காணப்படும். வடக்கிழக்கில் இருந்து நிலக்காற்று வீசுவதால் இரவில் குளிர்ந்த நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் இன்று வடகிழக்கில் இருந்து மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #tamilnews

Similar News