செய்திகள் (Tamil News)

கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளைபோன 1½ கிலோ நகைகள் மீட்பு

Published On 2018-02-02 08:37 GMT   |   Update On 2018-02-02 08:37 GMT
கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள நகைக்கடையில் கொள்ளைபோன 1½ கிலோ நகையை போலீசார் மீட்டனர்.

சென்னை:

கொளத்தூர் லட்சுமிபுரத்தில் நகைக்கடையில் 3 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட் டது. இதில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் நாது ராமை பிடிக்க தமிழக போலீசார் ராஜஸ்தான் சென்ற போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டார்.

இதையடுத்து கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ் சவுத்ரி, பக்தாராம் ஆகிய 3 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். 3 பேரையும் தமிழக போலீசார் சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.

நாதுராம் உள்பட 3 பேரிடம் 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

நாதுராமிடம் விசாரணை நடத்தியபோது கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அடகுக்கடையில் விற்று பணத்தை வாங்கியதாக தெரிவித்தார். சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் தெருவில் உள்ள நகை அடகு கடையில் 1½ கிலோ நகைகளையும், பெங்களூரில் உள்ள ஒரு அடகு கடையில் 1 கிலோ நகையும் விற்றதாக தெரிவித்தான்.

இதையடுத்து நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். நாதுராம் தெரிவித்த தகவலின் படி சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் தெருவில் உள்ள அடகு கடையில் விற்கப்பட்ட 1½ கிலோ நகையை போலீசார் மீட்டனர்.

இது தொடர்பாக அடகு கடை உரிமையாளரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

1 கிலோ நகைகளை பெங்களூர் அடகு கடையில் நாதுராம் விற்றுள்ளதால் நேற்று இரவு அவனை பெங்களூருக்கு அழைத்து சென்றனர்.

அங்கு நகைகளை வாங்கிய அடகு கடையில் சோதனை நடத்தி தங்க நகைகளை மீட்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

Similar News