செய்திகள்

பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத திண்டுக்கல் ரெயில் நிலையம்

Published On 2018-06-02 12:04 GMT   |   Update On 2018-06-02 12:04 GMT
திண்டுக்கல் ரெயில் நிலையம் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
முருகபவனம்:

திண்டுக்கல் ரெயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த பகுதியில் சேலம் வழியாக சென்னைக்கும், திருச்சி வழியாக சென்னைக்கும் மற்றும் தென் மாவட்டங்களுக்கும் செல்லலாம். எனவே தான் சுமார் 40-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கிறது.

இந்த வழியாக சுற்றுலா தலம், ஆன்மீக தலத்துக்கும் செல்லலாம் என்பதால் ஏராளமான மக்கள் வருகின்றனர். ஆனால் பயணிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இங்கு இல்லை. ரெயில் நிலைய முகப்பில் சாமியார்கள் போர்வையில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் உலா வருகின்றனர்.

அதோடு பிக்பாக்கெட் கொள்ளையர்களும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். பயணிகளுக்கு உரிய அத்தியாவசிய எந்த அடிப்படை வசதியும் கிடையாது. மினரல் வாட்டர் என கூறப்படும் எந்திரம் உள்ளது. ஆனால் தண்ணீர் வராது.

இது போன்ற ஏராளமான குறைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். பயணிகளுக்கு உரிய வாகன காப்பகம் டெண்டர் விடாமல் முடங்கி கிடக்கிறது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் பல்வேறு சமயங்களில் திருடு போய் விடுகிறது.

இது தவிர அனுமதியின்றி ஏராளமான வேன் மற்றும் கார்கள் நாள் கணக்கில் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் எச்சில் ஒழுகிக் கொண்டே நாய்கள் சுதந்திரமாக ஓடுகிறது. ஆடு மாடுகளும் ரெயில்வே தண்டவாளங்களை கடக்கின்றன.

குட்ஷெட் பகுதியில் பல சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் இந்த வி‌ஷயத்தில் தனிக் கவனம் செலுத்தி பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.#tamilnews
Tags:    

Similar News