செய்திகள்

13 பேர் பலியானதை வைத்து கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சி - ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் குற்றச்சாட்டு

Published On 2018-06-08 07:12 GMT   |   Update On 2018-06-08 07:12 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் குற்றச்சாட்டி உள்ளது. #Thoothukudishooting
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1994-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்புகளில் இருந்த காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதா கட்சியும் வேதாந்தா நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்தன. ஸ்டெர்லைட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடியின் போது, வேதாந்தா நிறுவனத்தை பாதுகாத்தவர்களும் இக்கட்சியின் தலைவர்களே.

இக்கட்சிகளின் முன்னாள்- இந்நாள் தலைவர்களும், உள்ளூர் தலைவர்களும், 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் இயங்குவதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது மட்டுமல்ல இந்த ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கும், புற்றுநோய்க்கு ஆளாகி மக்கள் கொல்லப்படுவதற்கும், 2018 மே 22 அன்று 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டிய முதற் குற்றவாளிகள் ஆவார்கள்.

1994-ம் ஆண்டு முதல் 2018 வரை வேதாந்தா நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க, அ.தி.மு.க தலைவர்கள் இன்று “ஸ்டெர்லைட்டை மூடு” என்றும், “ஸ்டெர்லைட்டை மூடிவிட்டோம்” என்றும் நாக்கு கூசாமல் பேசுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் நிதியுதவி அளித்து தங்களுடைய குற்றச் செயல்களில் இருந்து தப்பிக்க வழி தேடுகின்றனர்.

தி.மு.க.வுடனும், காங்கிரசுடனும் கூட்டணி அமைத்துள்ள ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் இக்குற்றவாளிகளோடு கூடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு நாடகமாடுகின்றன. வரப்போகும் தேர்தலில் மக்கள் சாவுகளை முன் வைத்து அரசியல் ஆதாயம் தேடவும் முயல்கின்றன.



தூத்துக்குடி மக்கள் கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வந்ததால் 28-ந்தேதி இந்த ஆலைக்கு நிரந்தரமாக பூட்டுப் போடுகிறோம் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த ஆலை தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மக்கள் முனைப்பாக இருக்கின்றனர். சட்டமன்றத்தின் மூலம் அதற்கான சிறப்பு சட்ட வடிவத்தை நிறைவேற்றாமல், அரசாணை என்ற மழுப்பல் அறிக்கை என்பது வேதாந்தா நிறுவனத்தை பாதுகாக்கவே வழி வகுக்கும்.

நிலம், நீர், காற்று, கடல் என தூத்துக்குடியின் சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் சீரழித்த பெருங்குற்றத்திற்காக வேதாந்தா தலைவர் அனில் சந்தீப் அகர்வாலும், ஸ்டெர்லைட் உயரதிகாரிகளும் கடுமையான குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசுகள் அனுமதியளித்ததால் பல்லாண்டுகளாக சீரழிக்கப்பட்ட இயற்கை வளங்களை சீரமைக்க வேண்டியதும், துப்புரவுப்படுத்த வேண்டியதும் அரசுகளின் கடமையாகும்.

எனவே சீரமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் பெருஞ்செலவுகளுக்காக வேதாந்தா நிறுவனத்தின் அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஸ்டெர்லைட்டால் சீரழிக்கப்பட்ட தூத்துக்குடி வட்டாரத்தில் சீர்கேடுகளை ஆய்வு செய்ய உண்மை அறியும் குழுவை நியமிக்கவும், அதில் எதிர்ப்பு இயக்கம் சார்பாக அறிவியலாளர்கள் (விஞ்ஞானிகள்) பங்கேற்கவும் அரசு வழி செய்ய வேண்டும். தூத்துக்குடி வட்டாரத்தில் வாழும் மக்களின் உடல்நிலையை கண்டறிய உயர் மருத்துவக் குழுவை நியமித்து அரசின் முழுப்பொறுப்பிலான சிறப்பு மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்.

முற்றுகை போராட்டத்தில் கொல்லப்பட்ட 13 பேரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு உதவித்தொகை வழங்குவது மட்டும் தீர்வல்ல. சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் தோல் நோய், மூச்சிளைப்பு நோய், புற்றுநோய் என இதுவரை பாதிக்கப்பட்டவர்களையும் கண்டறிந்து அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையும் அரசு வழங்க வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் மக்களை குறிபார்த்து சுடும் அதிநவீன துப்பாக்கிகளை பயன்படுத்த திட்டமிட்டவர்கள் யார்? அதற்கான நடவடிக்கையில் அமைச்சரவையின் பங்களிப்பு என்ன? என்பது பற்றி அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் அதற்கான ஆணிவேராக, மூளையாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்த வெங்கடேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த மகேந்திரன், டி.எஸ்.பி செல்வ நாகரத்தினம், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன் ஆகிய உயரதிகாரிகளின் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Thoothukudishooting

Tags:    

Similar News