செய்திகள் (Tamil News)

17 வயதில் திருமணம் - மணக்கோலத்தில் மீட்ட மாணவி படிப்பை தொடர விருப்பம்

Published On 2018-07-03 11:58 GMT   |   Update On 2018-07-03 11:58 GMT
பெற்றோர் வற்புறுத்தலால் 17 வயதில் திருமணம் செய்துக்கொண்டேன், நான் தொடர்ந்து படிக்க ஆசைப்படுகிறேன் என்று குழந்தைகள் நல அதிகாரியிடம் குமரி மாணவி கூறியுள்ளார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருக்கும் மார்த்தாண்டத்தில் திருமணம் நடைபெறுவதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமு தாவுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அதிகாரி குமுதா, சமூக நல அதிகாரி பியூலா, சைல்டு லைன் அமைப்பினர், ஆள் கடத்தல் தடுப்பு போலீசார் ஆகியோருடன் மார்த்தாண்டத்திற்கு சென்றார். அங்கு அவர்கள் விசாரணை நடத்திய போது அந்த சிறுமிக்கு காலையிலேயே திருமணம் நடைபெற்றதும், தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.

அங்குச் சென்று அதிகாரிகள் இரு வீட்டாரிடமும் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண்ணுக்கு 17 வயது தான் ஆவது உறுதியானது.

10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவருக்கு பெற்றோர் திருமணம் செய்ததும் தெரிய வந்தது. திருமண வயது ஆவதற்கு முன்பே அந்த சிறுமிக்கு திருமணம் செய்தது சட்டப்படி தவறு என்பதால் இது பற்றி இரு வீட்டாரிடமும் அதிகாரிகள் கூறினார்கள். சிறுமிக்கு 18 வயது நிரம்பிய பின்னர் தான் திருமண வாழ்க்கையை தொடர வேண்டும் என்றும் கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திரண்டிருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிறகு அந்த சிறுமியையும், வாலிபரையும் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த சிறுமி தனது குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் வற்புறுத்தியதால் திருமணத்திற்கு தான் சம்மதித்ததாக கூறினார். மேலும் தனக்கு தொடர்ந்து படிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்தார்.

விசாரணைக்கு பிறகு அந்த சிறுமியை நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்த அதிகாரிகள் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை மாவட்ட சமூக நல அதிகாரி பியூலா முன்பு அந்த சிறுமி 2-வது நாளாக ஆஜர்படுத்தப்பட்டார். அந்த வாலிபரும் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தார். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு அந்த சிறுமியை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிப்பை தொடர வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News