செய்திகள் (Tamil News)

அடையாறில் வேலைக்கார பெண் மர்ம மரணம் - தொழில் அதிபர், மனைவியிடம் விசாரணை

Published On 2018-07-05 09:25 GMT   |   Update On 2018-07-05 09:25 GMT
அடையாறில் வேலைக்கார பெண் மர்ம மரணம் தொடர்பாக தொழில் அதிபர், மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். கியாஸ் சிலிண்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஷ்மிதா. இவர்களது வீட்டில் ஆந்திராவை சேர்ந்த மகாலட்சுமி (19) என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்தார்.

முருகானந்தத்துக்கு சொந்தமான வீடு சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூவில் உள்ளது. இங்கு நேற்று முருகானந்தம்- சுஷ்மிதா தம்பதி வேலைக்கார பெண் மகாலட்சுமியுடன் வந்தனர்.

கணவன்-மனைவி இருவரும் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த போது மகாலட்சுமி உடலில் காயங்களுடன் கிடந்தார். ரத்த கட்டு காயங்களும் தோல் வெந்த நிலையிலும் இருந்தன. உடனே அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அடையாறு உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் மற்றும் சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்த மகாலட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தொழில் அதிபர் முருகானந்தம் அவரது மனைவி சுஷ்மிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும் போது, சென்னைக்கு வரும் போதே மகாலட்சுமி உடல் நலம் இல்லாமல் இருந்தார்.

இதனால் அவருக்கு வீட்டிலேயே வைத்து டிரிப்ஸ் ஏற்றப்பட்டு மருத்துவ சிகிச்சை அளித்தோம். வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த போது அவரது உடல் நிலை மோசமடைந்து இருந்தது என்றனர். ஆனால் மகாலட்சுமி உடலில் காயங்கள் இருப்பதால் போலீசார் மர்மசாவு என்று வழக்குபதிவு செய்துள்ளனர்.

மேலும் மகாலட்சுமிக்கு டிரிப்ஸ் மூலம் உடலில் மருந்து ஏற்றப்பட்டபோது தவறான மருந்து செலுத்தியதால் இறந்தாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக சிகிச்சை அளித்த நர்சிடம் விசாரணை நடத்தபடுகிறது. மேலும், முருகானந்தம்-சுஷ்மிதா தம்பதியிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே வேலைக்கார பெண் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதை போலீசார் மறுத்தனர்.

Tags:    

Similar News