செய்திகள் (Tamil News)

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் - இல.கணேசன்

Published On 2018-07-23 12:35 GMT   |   Update On 2018-07-23 12:35 GMT
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என்று இல.கணேசன் எம்.பி. கூறியுள்ளார். #LaGanesan #BJP

திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் 4 முனை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. நகர தலைவர் ஆர்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் வசந்தன், மாவட்ட செயலாளர் காமராஜ், ஒன்றிய பொதுச்செயலாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களை மாவட்ட தலைவர் தாமோதரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. பா.ஜ.க. கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 4 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட கூறமுடியவில்லை. அந்த அளவுக்கு ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஏழை மக்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கியது ஒரு மகத்தான திட்டம் ஆகும். அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கியது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும். ஏழைகளுக்கு வீடு வழங்கிய திட்டம் நாட்டில் அடித்தட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் முலம் நரேந்திர மோடிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சேலம்-சென்னை இடையே அமையும் 8 வழிச்சாலை திட்டம் இயற்கையாகவே சுமூகமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு 90 சதவீதம் மக்கள் தானாகவே முன்வந்து நிலம் கொடுத்துள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

நிலம் கொடுத்த மக்களுக்கு சந்தை மதிப்பைவிட ஒன்னரை மடங்கு அதிகமாக பணத்தை தமிழக அரசு தருகிறது. இந்த வி‌ஷயத்தில் தூத்துக்குடி சம்பவம் போல் துப்பாக்கிசூடு வரை போகாமல் சுமூகமான முறையை கையாண்டு திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வருவதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்குதேசம் பாராளுமன்றத்தில் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏன் அ.தி.மு.க ஆதரிக்க வேண்டும் என்று மற்றவர்கள் வலியுறுத்துகின்றனர் என எனக்கு புரியவில்லை.

ஆந்திரா மாநிலம் சம்மந்தமான பிரச்சினைக்கு அவர்கள் இந்த வழியை மேற்கொண்டுள்ளனர். நமக்கு தேவையானவற்றை மத்திய அரசு கேட்ட உடன் செய்கின்றது. அத்துடன் மேலும் தேவைப்படுவதை கேட்டுப் பெற்றுக் கொள்ளபோகிறோம்.

எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஏன் ஆதரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த பிரச்சினையை தமிழக எதிர்கட்சிகள் எதன் அடிப்படையில் பேசுகின்றனர் என்றே புரியவில்லை. இது ஒரு மாநிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைதான். தேசிய பிரச்சனை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கவர்னர் ஆய்வு நடத்துவதை ஏன் தி.மு.க. எதிர்த்து போராட்டம் நடத்துகிறது என தமிழக மக்களுக்கே புரியவில்லை. பிரதமர் நரேந்திரமோடி எது செய்தாலும் அதனை தி.மு.க. செயல்தலைவர் எதிர்கின்றார். ஏன், எதற்கு என புரியாமல் செயல்படும் அவரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர்.

பா.ஜ.க.வை சார்ந்து அ.தி.மு.க. இல்லை. இங்குள்ள கட்சிகள் பா.ஜ.க-அ.தி.மு.க. உறவு குறித்து தவறாக பேசிவருகின்றன. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை ரெய்டுக்கும், மத்திய அரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் தனக்கு அடிபணியாதவர்களை மிரட்ட வருமான வரித்துறையை பயன்படுத்தினார்கள். அந்த தேவை பா.ஜ.க.வுக்கு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு இல.கணேசன் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ கலிவரதன், கோட்ட பொருப்பாளர் குணா, இணை பொருப்பாளர் அருள், ஒன்றிய பொருளாளர் சதீஷ், ஒன்றிய வர்த்தகர் அணி தலைவர் பாலாஜி, இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் திருமால், முகையூர் ஒன்றிய தலைவர் அரிகிருஷ்ணன், அரகண்டநல்லூர் நகர தலைவர் ஏ.வி.கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

முடிவில் மாவட்ட துணைத்தலைவர் உமாமகேஸ்வரி நன்றி கூறினார். #LaGanesan #BJP

Tags:    

Similar News