செய்திகள் (Tamil News)

மின்வாரிய அதிகாரி வீட்டில் கொள்ளைபோன நகைகள், பணம் உறவினர் வீட்டின் முன் கிடந்தது

Published On 2018-08-01 09:24 GMT   |   Update On 2018-08-01 12:10 GMT
மின்வாரிய அதிகாரி வீட்டில் கொள்ளைபோன நகைகள்-பணம் முழுவதும் கிடைத்து, உறவினர் வீட்டின் முன்பு இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

பெரம்பூர்:

வியாசர்பாடி பக்தவச் சலம் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். மின்வாரிய அதிகாரி. இவருடைய மனைவி மணிமேகலை.

நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த 38 பவுன் தங்கநகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மகாகவி பாரதிநகர் போலீஸ் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டியவர்களின் கைரேகைகளை பதிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அருகில் உள்ள மணிமேகலையின் தந்தை வீட்டின் வாசலில் 25 பவுன் நகை கிடந்தது. அது கொள்ளைபோன நகை என்பதும் தெரியவந்தது. மணிமேகலை குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் நகை, பணத்தை திருடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

எனவே மணிமேகலை வீட்டின் அருகில் குடி இருப்பவர்கள் உறவினர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டன. நாளை மோப்ப நாய் வரும். அப்போது மீதி நகை, பணம் வைத்திருக்கும் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்று இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் எச்சரித்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 2-வது முறையாக மணிமேகலையின் தந்தை வீட்டின் முன்பு ஒரு துணி பொட்டலம் கிடந்தது. அதில் ஏற்கனவே திருட்டுபோனவற்றில் மீதமுள்ள ரூ.2 லட்சம் ரொக்கம், 13 பவுன் நகை ஆகியவை இருந்தன.

இதன்மூலம் மின்வாரிய அதிகாரி பார்த்திபன் வீட்டில் கொள்ளைபோன பணம், நகைகள் முழுவதும் திரும்ப கிடைத்துள்ளது. பணம்-நகை திருடியவர்கள் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து அவற்றை வீட்டின் முன்பு வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News