பாகிஸ்தானுடன் பாஜகவுக்கு திருமணம்.. கட்டித் தழுவி பிரியாணி சாப்பிட்டது யார்?.. கார்கே கேள்வி
- நவாஸ் செஷரீப் ஐ கட்டித் தழுவி பிரியாணி சாப்பிட்டு மகிழ பாகிஸ்தான் சென்றது யார் என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
- பாஜக இந்தியாவை காதலிப்பதாகக் கூறலாம். ஆனால் பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் திருமணம் ஆகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் சூழலில் காங்கிரஸ் -என்சிபி கூட்டணியைப் பாகிஸ்தானோடு தொடர்புப்படுத்தி பாஜக விமர்சித்து வருகிறது. சட்டப்பிரிவு 370 விவகாரத்தில் காங்கிரஸ்-என்சிபி மற்றும் பாகிஸ்தான் ஒரே பக்கத்தில்தான் உள்ளது என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தை வைத்து காங்கிரசை தேச விரோத சக்தி என்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரச்சாரத்தின்போது விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, முன்னாள் பிரதமர் நவாஸ் செஷரீப் ஐ கட்டித் தழுவி பிரியாணி சாப்பிட்டு மகிழ பாகிஸ்தான் சென்றது யார் என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய கார்கே, காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடியும் அமித்ஷாவும் சொல்கின்ற அனைத்துமே சுத்த பொய்கள். மக்களை திசை திருப்புவதற்காக இந்த பொய்களை அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் ஒருபோதும் பிரியாணி சாப்பிடவோ, அவரை[ நவாஸ் செஷரீப் -ஐ] கட்டித் தழுவவோ செல்லவில்லை. பாஜக இந்தியாவை காதலிப்பதாகக் கூறலாம். ஆனால் பாஜகவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் திருமணம் ஆகியுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வரும் வேலையில் காஷ்மீர் அமைதியாக இருப்பதாகவும் வளர்ச்சி அடைத்துள்ளதாகவும் மோடி கூறி வருகிறார். மத்தியில் ஆட்சியில் உள்ள போதும் இன்னும் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்காதது ஏன்?
பாஜகவை தேர்தலில் ஓரம்கட்டவே காங்கிரஸ் - என்.சி.பி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. எங்களின் முதன்மையான நோக்கம் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கச் செய்வதே என்று பேசியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மோடி பாகிஸ்தான் சென்று அப்போதைய பிரதமர் நவாஸ் செஷரீப்- ஐ சந்தித்தது குறிப்பிடத்தக்கது.