செய்திகள்

வேதாரண்யத்தில் 100 நாள் திட்டப்பணியின் போது மயங்கி விழுந்த மூதாட்டி பலி

Published On 2018-08-03 10:16 GMT   |   Update On 2018-08-03 10:16 GMT
வேதாரண்யத்தில் 100 நாள் திட்டப்பணியின் போது மயங்கி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா கீழக்குத்தகையைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி பார்வதி (வயது 61). அதே பகுதியில் உள்ள ராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நூறு நாள் வேலை வாய்ப்பில் பண்ணைக் குட்டை வெட்டும்பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நூறுநாள் வேலை திட்டப்பணியில் பார்வதியும் நேற்று மண்வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பண்ணைக்குட்டையிலேயே பார்வதி மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட ஒன்றிய ஆணையர் தியாகராஜன், இறந்த பார்வதியின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி ரூ.25 ஆயிரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் பார்வதி பண்ணைக்குட்டை பணியில் மயங்கி விழுந்தபோது 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. அருகில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லலாம் என்று முயற்சி செய்தபோது அங்கும் பணியில் யாரும் இல்லை என தெரியவந்தது. இதனால் முதலுதவி செய்ய முடியாமல் மூதாட்டி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

Tags:    

Similar News