செய்திகள்

நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற மேலும் 3 பேர் கைது

Published On 2018-08-03 13:59 GMT   |   Update On 2018-08-03 13:59 GMT
நாகர்கோவிலில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற மேலும் 3 பேரை கைது செய்தனர்.
நாகர்கோவில்:

தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய அரசு தடை செய்து உள்ளது. இந்த நிலையில் தடையை மீறி லாட்டரி சீட்டு விற்பனை சில இடங்களில் நடைபெற்று வந்தது. குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கு புகார் வந்தது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லாட்டரி சீட்டு விற்பவர்களை கணகாணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாவட்டம் முழுவதும் போலீசார் லாட்டரி சீட்டு விற்பவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசேரி பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக சிலர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்த நிலையில் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் போலீசார் ரோந்து வந்தனர்.

அப்போது மீனாட்சி புரம் பகுதியில் சந்தேகப்படும் படியாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த பகவதி (வயது 45), அய்யம்பெருமாள் (60), ஷேக் இப்ராகிம் (33) என்பது தெரிய வந்தது. அவர்கள் அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த 37 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News