செய்திகள்

பாகப்பிரிவினை அசல் ஆவணங்களை வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சார் பதிவாளர் கைது

Published On 2018-09-08 03:08 GMT   |   Update On 2018-09-08 03:08 GMT
பாகப்பிரிவினை அசல் ஆவணங்களை வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சார் பதிவாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை சின்னப்பா நகரை சேர்ந்தவர் சுமதி. இவரது தந்தை பெருமாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுமதி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து, தந்தை பெருமாள் பெயரில் உள்ள நிலத்தை, பாகப்பிரிவினை செய்தார்.

பின்னர் அதற்கான ஆவணத்தை கடந்த 5-ந்தேதி புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் முதல்நிலை சார் பதிவாளர் சுசீலாவிடம், சுமதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தாக்கல் செய்தனர். பின்னர் அதற்கான கட்டணத்தையும் செலுத்தி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஆவணங்களை அன்றே சார் பதிவாளர் சுசீலா பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பதிவு செய்த அசல் ஆவணங்களை கடந்த 6-ந்தேதி மதியம் சார் பதிவாளர் சுசீலாவை சந்தித்து சுமதி கேட்டுள்ளார்.

அப்போது, அவரிடம் ரூ.3 கோடிக்கு மேல் சொத்துகளை பாகப்பிரிவினை செய்துள்ளதால், தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் எனவும், இதில் முன்பணமாக ரூ.20 ஆயிரத்தை சார் பதிவாளர் அலுவலகம் வந்து தன்னிடம் கொடுக்க வேண்டும் எனவும், மீதி பணத்தை விரைவில் கொடுத்துவிட்டு, அசல் ஆவணங்களை வாங்கி செல்லும்படியும் சுமதியிடம், சார் பதிவாளர் சுசீலா கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சுமதி, இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமதியிடம் ரசாயனப்பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்து, புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சுமதி, அங்கு பணியில் இருந்த சுசீலாவிடம், ரசாயன பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார் பதிவாளர் சுசீலாவை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 6.15 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது.

பின்னர் அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிபதி அகிலா ஷாலினி வீட்டில், அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சுசீலா திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள சுசீலா வீட்டிலும் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் நூற்றுக்கணக்கான பட்டுப்புடவைகளையும் போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. ஆனால் எவ்வளவு நகைகள் கைப்பற்றப்பட்டது என்ற விவரத்தை போலீசார் கூற மறுத்து விட்டனர்.
Tags:    

Similar News