செய்திகள்

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: திருநாவுக்கரசர்

Published On 2018-09-22 02:32 GMT   |   Update On 2018-09-22 02:32 GMT
ராஜபக்சே பேச்சை காரணம் காட்டி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #Congress #MDK
சென்னை :

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 25-ந் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஆளுங்கட்சி பொதுக்கூட்டம் நடத்துவது மிகுந்த வியப்பை தருகிறது. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பொதுவாக கூறியதை மூடி மறைத்து இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ உதவி செய்ததாக கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஆகும்.

தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய அவதூறு சேற்றை அன்றைய காங்கிரஸ், தி.மு.க. பங்கேற்ற மத்திய அரசின் மீது அள்ளி வீசுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.



இலங்கையில் போர் நடந்துக் கொண்டிருந்த சூழலில் அதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, ஒரு போர் என்றுச் சொன்னால் அதிலே அப்பாவிகள் கொல்லப்படுவதும், பாதிக்கப்படுவதும் இயல்பானது தான் என்று கூறியதை இன்றைய அ.தி.மு.க.வினரால் மறுக்க முடியுமா?.

விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தியவர் ஜெயலலிதா. ஆனால் அதே ஜெயலலிதா 2009-க்கு பிறகு தனது நிலையை மாற்றிக்கொண்டு தமிழ் ஈழத்தை பெற்றுத்தர இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டுமென்று கூறியதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அ.தி.மு.க.வினர் பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று உள்நோக்கத்தோடு செயல்படுகின்றனர். அவர்களது நப்பாசை நிச்சயம் நிறைவேறாது என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். தமிழகத்தின் அரசியல் காற்று அ.தி.மு.க.வுக்கு எதிராக வீச ஆரம்பித்துவிட்டது. இத்தகைய பொதுக்கூட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றாது, மீண்டும் கொண்டுவராது என்பதை கூற விரும்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress #MDK
Tags:    

Similar News