செய்திகள்

மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்- போலீசாருடன் தள்ளுமுள்ளு

Published On 2018-09-24 12:34 GMT   |   Update On 2018-09-24 12:34 GMT
புதுவை தேங்காய்த் திட்டில் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி:

புதுவை தேங்காய்த் திட்டில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து புதுவையை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் அடிக்கடி அடைப்பு ஏற்படும். இதனால் படகுகளில் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வம்பாகீரப்பாளையம் முகத்துவாரம் மணல் மேடிட்டு அடைத்தது. இதனால் கடந்த 10-ந்தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

அதோடு துறைமுக முகத்துவாரத்தை உடனடியாக தூர்வார வேண்டும். கடல்பகுதியின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

சில நாட்களுக்கு முன்பு விசைப்படகு, கன்னா படகு, எப்.ஆர்.பி. ஆகியவற்றில் கறுப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் முன்பு மீனவர்கள் ஒன்று கூடினர். அங்கு வாசலில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். செயலாளர் கவி, பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துறைமுகத்தில் உள்ள மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மீனவர்கள் போலீசார் தடையை மீறி உள்ளே புகுந்து மீன்வளத்துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போராட்டம், 18 மீனவ கிராமங்களை இணைத்து பந்த் போரட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News