சட்டப்பிரிவு 370: காங்கிரஸ் பாகிஸ்தான் மொழி பேசுகிறது - பிரதமர் மோடி பாய்ச்சல்
- அதை நாங்கள் பூமியில் புதைத்து விட்டோம்.
- ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ திரும்ப பெற முயற்சிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானின் மொழி பேசுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தின் புனேயில் நடைபெற்ற பேரணியில் பேசிய மோடி, "சட்டப்பிரிவு 370-ஐ யாராலும் திரும்பப் பெற முடியாது, அதை நாங்கள் பூமியில் புதைத்து விட்டோம்" என்று தெரிவித்தார்.
சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்கும் கோரிக்கையை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று அவர் மேலும் தெரிவித்தார்ர். தொடர்ந்து பேசிய அவர், "சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது."
"அரசியலமைப்பு புத்தகங்களை நாட்டிற்கு காட்டுபவர்கள், மகாராஷ்டிராவில் வெற்று புத்தகங்களை விநியோகிப்பவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், அவர்கள் (காங்கிரஸ்) ஆறு முதல் ஏழு தசாப்தங்களாக நாட்டை ஆண்டார்கள். ஆனால் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு ஏன் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படவில்லை?".
"மக்கள் ஆசியுடன் மோடி, உங்கள் சேவகர், சட்டப்பிரிவு 370-ஐ மண்ணுக்குள் புதைத்துவிட்டார். 370-வது பிரிவு காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து, காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஊக்குவித்தது."
"காஷ்மீரில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சட்டப்பிரிவு 370 பயன்படுத்த அனுமதிக்கவில்லை. 370வது சட்டப்பிரிவை பா.ஜ.க. ரத்து செய்து மூவர்ணக்கொடியை அங்கு ஏற்றியது. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டி பிரிவினைவாதிகளின் திட்டங்களை முறியடித்தோம்."
"மஹாயுதி கூட்டணியால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என்பது மகாராஷ்டிராவுக்கு தெரியும். மகாராஷ்டிராவில் மஹாயுதி ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வருகிறது. மஹா விகாஸ் அகாதி அரசாங்கத்தின் இரண்டரை ஆண்டுகள் எங்கள் திட்டங்களை நிறுத்துவதிலேயே செலவழிக்கப்பட்டன. இதுதான் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கலாச்சாரம்,'' என்று தெரிவித்தார்.