பாண்டிச்சேரியில் இருந்து ராமேசுவரத்திற்கு அரசு பஸ்சில் மது பாட்டில்கள் கடத்தல் - டிரைவர்-கண்டக்டர் கைது
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை, மது பாட்டில்கள் கடத்தல்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத் துரை உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மது விலக்கு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு வரும் அரசு பஸ்சில் வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக கூடுதல் சூப்பிரண்டு வெள்ளத்துரைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை அவரது தலைமையில் ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் மது விலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
சிதம்பரத்தில் இருந்து வந்த அரசு பஸ்சை சோதனை செய்தபோது டிரைவர் சீட் அருகில் ஒரு பெட்டி இருந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் 53 மது பாட்டில்கள் இருந்தது. இவை அனைத்தும் பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் மது பாட்டில்களை கடத்தி வந்தது அரசு பஸ் டிரைவர் ராமநாதபுரம் பால்கரையைச் சேர்ந்த சல்மான்கான் (வயது 41), செய்யலூரைச் சேர்ந்த கண்டக்டர் கோவிந்தராஜ் (48) என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.