செய்திகள்

சென்னையில் இருந்து நெல்லை, கோவைக்கு தீபாவளிக்கு முன்பதிவில்லாத 8 சிறப்பு ரெயில்கள்

Published On 2018-10-13 04:37 GMT   |   Update On 2018-10-13 04:37 GMT
சென்னையில் இருந்து நெல்லை, கோவைக்கு தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் 8 முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். #Train #SpecialTrain

சென்னை:

சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் ‘ரெயில் பார்ட்னர்’ எனப்படும் செயலி அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

இந்த செயலியை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்சிரேஷ்டா அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-

தாமிரபரணி புஷ்கர விழாவுக்காக 18 சிறப்பு ரெயில்களும், தசரா பண்டிகைக்காக 33 சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே 42 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கோவைக்கு விடப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் 8 முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இவற்றில் சென்னை- நெல்லைக்கு 4 சிறப்பு ரெயில்களும், சென்னை- கோவைக்கு 4 சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும்.


நடப்பு ஆண்டில் தெற்கு ரெயில்வேயின் கீழ் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம், சென்னை ஆகிய கோட்டங்களில் 311 ஆளில்லாத ரெயில்வே கேட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வே 2018-19-ம் ஆண்டில் செப்டம்பர்வரை ரூ.4434.14 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டம் வருவாயுடன் ஒப்பிடும் போது 14.94 சதவீதம் அதிகமாகும்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை 42.2 கோடி பேர் ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.8 சதவீதம் அதிகம்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘ரெயில் பார்ட்னர்’ செயலி மூலம் ரெயில்கள் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம், பாதுகாப்பு உதவி எண், ரெயில் பயணத்தின் போது தேவையான வசதிகள், தேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த செயலி மூலம் 20 முக்கிய தேவைகளுக்கான நேரடி அழைப்பு வசதிகள் கொடுக்கப்படும்.

இந்த செயலி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். #Train #SpecialTrain

Tags:    

Similar News