செய்திகள்
கும்பகோணம் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
கும்பகோணம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கடைவீதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணான பேசியதால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் . அப்போது அவர்கள் 3 பேரும் பல்வேறு இடங்களில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும், மருதாநல்லூரில் நடந்த வழிப்பறியில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்கள் திருநரையூர் ரமேஷ், திருமலை ராஜபுரத்தை சேர்ந்த ஜெயசீலன், மேலூரைச் சேர்ந்த நீலகண்டன் என்று தெரியவந்தது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் பதுக்கி வைத்திருந்த 89 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.22 லட்சம் ஆகும்.
கைதான 3 பேரையும் நேற்று இரவு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.