செய்திகள் (Tamil News)

அறிவிப்பும், அறிக்கையும் நிவாரணத்திற்கு உதவாது: முக ஸ்டாலின்- கமலுக்கு தமிழிசை கண்டனம்

Published On 2018-11-23 07:46 GMT   |   Update On 2018-11-23 07:46 GMT
அறிவிப்பு, அறிக்கை கணக்கீடுகள் மட்டுமே புயல் நிவாரண பணிக்கு தீர்வாகாது என்று திருச்சி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #KamalHaasan
திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு உதவ பா.ஜனதா சார்பில் ஏற்கனவே ஒரு நாள் முகாமிட்டு எனது தலைமையில் உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தற்போது 35 ஆயிரம் குடும்பங்களுக்கு மருந்து உள்பட ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் பா.ஜனதா சார்பில் வழங்க 3 பெரிய டிரக் வண்டிகளில் பொருட்கள் கொண்டு செல்கிறோம்.

நான் மருத்துவர் என்ற முறையில் வேதாரண்யம் பகுதியில் வருகிற 26-ந்தேதி வரை அங்கேயே முகாமிட்டு மருத்துவ முகாம்களையும் நடத்த உள்ளோம். கஜா புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிப்பு என்பது பயன் இல்லை.

அறிவிப்பு, அறிக்கை கணக்கீடுகள் மட்டுமே தீர்வு ஆகாது. ஏற்கனவே புயல் பாதித்த மறுநாள் முதல் பேரிடர் நிவாரண குழு தான் அனைத்து பணிகளையும் செய்தது. இதை கருத்து கணிப்புப்படி அரசியல் களமாக யாரும் மாற்றக் கூடாது. இது புயல் களம்.


மக்களின் தேவைகளை மனதில் கொண்டே பணிகளை செய்ய வேண்டும். அரசியல் தலைவர்களின் கருத்து மக்களுக்கு எதிர் மறையான கருத்துகளாகி விடும். நடிகர் கமல்ஹாசன் நேற்று வந்து பார்வையிட்டு விட்டு குடிசைகள் இருப்பதையும், மக்கள் ஏழைகளாக இருப்பதையும் அரசு விரும்புகிறது என கூறியுள்ளார்.

அவர் இப்போது தான் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார். அவர் ஆராய்ச்சி செய்யட்டும். நான் இங்கே யாரையும் விமர்ச்சிக்கவோ, எதையும் ஆராய்ச்சி செய்யவோ வரவில்லை. புயல் பாதிப்பை முதலில் பார்வையிட வரவில்லை என்று கூறுவது, வந்து பார்த்தால் அதை நடந்து சென்றார், பறந்து சென்றார் என்று விமர்சிப்பது, பிரதமரை சந்திக்க முதல்வர் டெல்லி சென்றால் யாரையும் இங்கு கலந்து ஆலோசிக்காமல் சென்றார் என்று குறை கூறுவது என எல்லாவற்றையும் இது போன்ற நேரங்களில் விமர்சித்துக் கொண்டே இருக்க கூடாது.

அதேபோன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படலாம் என்று கூறியுள்ளார். நாங்களும் தயாராகத்தான் இருக்கிறோம்.

அவர் எங்களோடு வந்து தாராளமாக பணியாற்றலாம். மாநில அரசு 15 ஆயிரம் கோடி நிவாரண தொகையை மத்திய அரசிடம் கேட்டுள்ளது. நிதி கணக்கீட்டை விட, நிர்வாக கணக்கீடுதான் முக்கியம். தி.மு.க. ஆட்சியில் புயல்களே வரவில்லையா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது வந்த தானே புயலுக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி கொடுத்தது. அப்போது தி.மு.க. மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்தது. பா.ஜனதா தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை செய்து வருகிறது. விரைவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் வரவுள்ளார். மத்தியக்குழுவும் வரவுள்ளது. மக்களுக்கு உதவுவது மட்டுமே அனைவரின் நோக்கமாக இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #KamalHaasan
Tags:    

Similar News