செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் பெண் உட்பட இருவரிடம் 232 கிராம் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெண் உட்பட இருவரிடம் 232 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #trichyairport
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து சமீப காலமாக தங்கம் கடத்தும் சம்பவம் குறைந்திருந்தது.
தற்போது மீண்டும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் திருச்சி பெண் உட்பட 5 பயணிகளிடம் இருந்து மொத்தம் 7 கிலோ 765 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகள், ஆவணங்களை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், திருவாரூரை சேர்ந்த கவிதா ஆகியோரிடம் இருந்து தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் எடை 232 கிராம் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 7 ஆயிரம் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கவிதா, கோபாலகிருஷ்ணனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #trichyairport