செய்திகள் (Tamil News)

பாராளுமன்ற தேர்தலில் சீட் கேட்டு கமல்ஹாசன் கட்சியில் 1137 பேர் விருப்ப மனு

Published On 2019-03-09 10:09 GMT   |   Update On 2019-03-09 11:09 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இதுவரை 1137 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கமல்ஹாசன் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று 150க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. #Parliamentelection #KamalHaasan
சென்னை:

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.

கமல் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டன. கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

சென்னை கட்சி தலைமை அலுவலகம், பொள்ளாச்சி கட்சி அலுவலகம் மற்றும் இணையதளம், மொபைல் செயலி மூலமாகவும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன.

இலவசமாக வழங்கப்பட்ட விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளிக்க மட்டும் விண்ணப்ப கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் நிகழ்வு நேற்றும் நேற்று முன் தினமும் நடந்தது. கட்சி தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனே நேரடியாக விண்ணப்பங்களை வாங்கினார்.

நேற்று மாலையுடன் விருப்ப மனு பெறும் பணிகள் நிறைவடைந்தன. இதுவரை 1137 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கமல்ஹாசன் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று 150க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. அதிகமாக ராமநாதபுரம், தென்சென்னை தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் வந்துள்ளது. ராமநாதபுரம் கமல்ஹாசன் பிறந்த ஊர் ஆகும். தென்சென்னை கமலின் தற்போதைய வீடு, அலுவலகம் அமைந்துள்ள ஆழ்வார்பேட்டையை உள்ளடக்கிய தொகுதி.

விருப்ப மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் நாளையும் நடக்க இருக்கிறது. இதற்காக கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. #Parliamentelection #KamalHaasan

Tags:    

Similar News